திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

திருப்பாடல்கள் › அதிகாரம் 9

திருப்பாடல்கள் 9

திருப்பாடல் 9

நீதியின் கடவுளுக்கு நன்றி செலுத்துதல்

பாடகர் தலைவர்க்கு; 'மகனுக்காக உயிரைக் கொடு' என்ற மெட்டு; தாவீதின் புகழ்ப்பா

1 ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்; வியத்தகு உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்.

2 உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களிகூர்வேன்; உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவேன்.

3 என் எதிரிகள் பின்னிட்டுத் திரும்புவார்கள்; உமது முன்னிலையில் இடறிவிழுந்து அழிவார்கள்.

4 நீர் நீதியுள்ள நடுவராய் அரியணையில் வீற்றிருக்கின்றீர்; என் வழக்கில் எனக்கு நீதி வழங்கினீர்.

5 வேற்றினத்தாரைக் கண்டித்தீர்; பொல்லாரை அழித்தீர்; அவர்களது பெயர் இனி இராதபடி அடியோடு ஒழித்துவிட்டீர்.

6 எதிரிகள் ஒழிந்தார்கள்; என்றும் தலையெடுக்கமுடியாமல் அழிந்தார்கள்.

7 அவர்களின் நகர்களை நீர் தரைமட்டம் ஆக்கினீர்; அவர்களைப்பற்றிய நினைவு அற்றுப் போயிற்று. ஆண்டவர் அரியணையில் என்றென்றும் வீற்றிருக்கின்றார்; நீதி வழங்குவதற்கென்று அவர் தம் அரியணையை அமைத்திருக்கின்றார்.

8 உலகிற்கு அவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்; மக்களினத்தார்க்கு நேர்மையான தீர்ப்புக் கூறுவார்.

9 ஒடுக்கப்படுவோருக்கு ஆண்டவரே அடைக்கலம்; நெருக்கடியான வேளைகளில் புகலிடம் அவரே.

10 உமது பெயரை அறிந்தோர் உம்மில் நம்பிக்கை கொள்வர்; ஆண்டவரே, உம்மை நாடி வருவோரை நீர் கைவிடுவதில்லை.

11 சீயோனில் தங்கியிருக்கும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; அவருடைய செயல்களை மக்களினத்தாரிடையே அறிவியுங்கள்;

12 ஏனெனில், இரத்தப்பழி வாங்கும் அவர் எளியோரை நினைவில் கொள்கின்றார்; அவர்களின் கதறலை அவர் கேட்க மறவார்.

13 ஆண்டவரே, என்மீது இரக்கமாயிரும்; என்னைப் பகைப்போரால் எனக்கு வரும் துன்பத்தைப் பாரும்; சாவின் வாயினின்று என்னை விடுவியும்.

14 அப்பொழுது, மகள் சீயோனின் வாயில்களில் உம் புகழ் அனைத்தையும் பாடுவேன்; நீர் அளிக்கும் விடுதலைகுறித்து அகமகிழ்வேன்.

15 வேற்றினத்தார் வெட்டின குழியில் அவர்களே விழுந்தனர்; அவர்கள் மறைத்து வைத்திருந்த வலையில் அவர்கள் கால்களே சிக்கிக்கொண்டன.

16 ஆண்டவர் நீதியை நிலைநாட்டுவதன் மூலம் தம்மை வெளிப்படுத்தியுள்ளார்; பொல்லார் செய்த செயலில் அவர்களே சிக்கிக்கொண்டனர். (இடை இசை: சேலா)

17 பொல்லார் பாதாளத்திற்கே செல்வர்; கடவுளை மறந்திருக்கும் வேற்றினத்தார் யாவரும் அங்கே செல்வர்.

18 மாறாக, வறியவர் என்றுமே மறக்கப்படுவதில்லை; எளியோரின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது.

19 ஆண்டவரே, எழுந்தருளும்; மனிதரின் கை ஓங்க விடாதேயும்; வேற்றினத்தார் உமது முன்னிலையில் தீர்ப்புப் பெறுவார்களாக!

20 ஆண்டவரே, அவர்களைத் திகிலடையச் செய்யும்; தாம் வெறும் மனிதரே என்பதை வேற்றினத்தார் உணர்வார்களாக! (சேலா)