திருப்பாடல்கள் › அதிகாரம் 53
திருப்பாடல் 53
இறைப்பற்று இல்லார்
பாடகர் தலைவர்க்கு;<br/>'நோயுற்று' என்ற மெட்டு;<br/>தாவீதின் அறப்பாடல்
1 'கடவுள் இல்லை' என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்; அவர்களுள் சிலர் கெட்டு அருவருப்பான செயல்களில் ஈடுபடுகின்றனர்; நல்லது செய்வார் யாரும் இல்லை.
2 கடவுள் விண்ணகத்தினின்று மானிடரை உற்றுநோக்குகின்றார்; மதிநுட்பமுள்ளவர், கடவுளை நாடுபவர் எவராவது உண்டோ என்று பார்க்கின்றார்.
3 எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்; ஒருமிக்கக் கெட்டு போயினர்; நல்லது செய்வார் யாரும் இல்லை; ஒருவர் கூட இல்லை.*
4 'தீங்கிழைக்கும் யாவரும் அறிவை இழந்துவிட்டார்களோ? உணவை விழுங்குவதுபோல் என் மக்களை விழுங்கப் பார்க்கின்றார்களே!' இவர்கள் கடவுளை நோக்கி மன்றாடுவதுமில்லை;
5 எனவே, அவர்கள் இதுவரை கண்டிராத முறையில் பேரச்சத்தால் நடுநடுங்குவர்; இறைமக்களை ஒடுக்கியோரின் எலும்புகளைக் கடவுள் சிதறடிப்பார்; கடவுள் அவர்களைக் கைவிட்டதால் அவர்கள் மானக்கேடு அடைவர்.
6 சீயோனிலிருந்து இஸ்ரயேலருக்கு மீட்பு வருவதாக! கடவுள் தம் மக்களுக்கு மீண்டும் வளமான வாழ்வை அருளும்போது, யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக! இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக!
குறிப்புகள்
* உரோ 3:10-12.