திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

திருப்பாடல்கள் › அதிகாரம் 3

திருப்பாடல்கள் 3

திருப்பாடல் 3

காலை மன்றாட்டு

தாவீதின் புகழ்ப்பா; தம் மகன் அப்சலோமிடமிருந்து தப்பியோடிய போது அவர் பாடியது

1 ஆண்டவரே, என் எதிரிகள் எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்! என்னை எதிர்த்து எழுவோர் எத்தனை மிகுந்து விட்டனர்!*

2 'கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்' என்று என்னைக் குறித்துச் சொல்வோர் பலர். (சேலா)

3 ஆயினும், ஆண்டவரே, நீரே எனைக் காக்கும் கேடயம்; நீரே என் மாட்சி; என்னைத் தலைநிமிரச் செய்பவரும் நீரே.

4 நான் உரத்த குரலில் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்; அவர் தமது திருமலையிலிருந்து எனக்குப் பதிலளிப்பார். (சேலா)

5 நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்; ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு.

6 என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன்.

7 ஆண்டவரே, எழுந்தருளும்; என் கடவுளே, என்னை மீட்டருளும்; என் எதிரிகள் அனைவரையும் கன்னத்தில் அறையும்! பொல்லாரின் பல்லை உடையும்!

8 விடுதலை அளிப்பவர் ஆண்டவர்; அவர்தம் மக்களுக்கு ஆசி வழங்குவாராக! (சேலா)

குறிப்புகள்

* 3 தலைப்பு = 2 சாமு 15:13-17:22.