திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

திருப்பாடல்கள் › அதிகாரம் 2

திருப்பாடல்கள் 2

திருப்பாடல் 2

கடவுள் தேர்ந்துகொண்ட அரசர்

1 வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்?

2 ஆண்டவருக்கும் அவர்தம் அருள் பொழிவு பெற்றவர்க்கும் எதிராகப் பூவுலகின் அரசர்கள் அணிவகுத்து நிற்கின்றார்கள்; ஆள்வோர் ஒன்றுகூடிச் சதிசெய்கின்றார்கள்;1

3 'அவர்கள் பூட்டிய தளைகளைத் தகர்ப்போம்; அவர்கள் வைத்த கண்ணிகளை நம்மிடமிருந்து அறுத்தெறிவோம்' என்கின்றார்கள்.

4 விண்ணுலகில் வீற்றிருப்பவர் எள்ளி நகைக்கின்றார்; என் தலைவர் அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கின்றார்.

5 அவர் சினமுற்று அவர்களை மிரட்டுகின்றார்; கடுஞ்சினத்தால் அவர்களைக் கலங்கடிக்கின்றார்;

6 'என் திருமலையாகிய சீயோனில் நானே என் அரசரைத் திருநிலைப்படுத்தனேன்.'

7 ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்; 'நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்.2

8 நீர் விரும்புவதை என்னிடம் கேளும்; பிறநாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்; பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன்.

9 இருப்புக் கோலால் நீர் அவர்களைத் தாக்குவீர்; குயவன் கலத்தைப்போல அவர்களை நொறுக்குவீர்.'3

10 ஆகவே, மன்னர்களே, விவேகமாக நடந்துகொள்ளுங்கள்; பூவுலகை ஆள்வோரே, எச்சரிக்கையாயிருங்கள்.

11 அச்சத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்; நடுநடுங்குங்கள்! அவர்முன் அக மகிழுங்கள்!

12 அவர் சினங்கொள்ளாதபடியும் நீங்கள் வழியில் அழியாதபடியும் அவரது காலடியை முத்தமிடுங்கள்; இல்லையேல், அவரது சினம் விரைவில் பற்றியெரியும்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் பேறுபெற்றோர்.

குறிப்புகள்

1 திப 4:25-26.

2 திப 13:33; எபி 1:5; 5:5.

3 திவெ 2:26-27; 12:5; 19:15.