திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

திருப்பாடல்கள் › அதிகாரம் 113

திருப்பாடல்கள் 113

திருப்பாடல் 113

ஆண்டவரின் கருணை

1 அல்லேலூயா! ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள்.

2 ஆண்டவரது பெயர் வாழ்த்தப்பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப்பெறுவதாக!

3 கீழ்த்திசை முதல் மேற்றிசைவரை ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக!

4 மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும்விட உயர்ந்து அவரது மாட்சி.

5 நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர்போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்?

6 அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார்;

7 ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்;

8 உயர்குடி மக்களிடையே – தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே – அவர்களை அமரச் செய்கின்றார்.

9 மலடியை அவள் இல்லத்தில் வாழ வைக்கின்றார்; தாய்மைப்பேறு பெற்று மகிழுமாறு அவளுக்கு அருள்கின்றார். அல்லேலூயா!