திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

திருப்பாடல்கள் › அதிகாரம் 54

திருப்பாடல்கள் 54

திருப்பாடல் 54

எதிரியிடமிருந்து காக்க வேண்டுதல்

பாடகர் தலைவர்க்கு;<br/>நரம்பிசைக் கருவிகளுடன்;<br/>தாவீது தங்களிடம் ஒளிந்து கொண்டிருப்பதாகச்<br/>சிப்பியர் சவுலிடம் தெரிவித்தபோது<br/>தாவீது பாடிய அறப்பாடல்

1 கடவுளே, உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்; உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும்.*

2 கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும்.

3 ஏனெனில், செருக்குற்றோர் எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்; கொடியவர் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர்; அவர்கள் கடவுளை அறவே நினைப்பதில்லை. (சேலா)

4 இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்; என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்;

5 என் எதிரிகள் எனக்குச் செய்ய விரும்பும் தீமையை அவர்கள் மேலேயே அவர் திருப்பிவிடுவாராக! 'உம் வாக்குப் பிறழாமைக்கு ஏற்ப அவர்களை அழித்தொழியும்!

6 தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்; ஆண்டவரே, உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று.'

7 ஏனெனில், அவர் என்னை எல்லா இன்னல்களினின்றும் விடுவித்துள்ளார்; என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாரக் கண்டுள்ளேன்.

குறிப்புகள்

* 54 தலைப்பு: 1 சாமு 23:19; 26:1.