திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

திருப்பாடல்கள் › அதிகாரம் 12

திருப்பாடல்கள் 12

திருப்பாடல் 12

உதவிக்காக மன்றாடல்

பாடகர் தலைவர்க்கு: எட்டாம் கட்டையில்; தாவீதின் புகழ்ப்பா

1 ஆண்டவரே, காத்தருளும்; ஏனெனில் உலகில் இறையன்பர்கள் அற்றுப் போயினர்; மானிடருள் மெய்யடியார் மறைந்து போயினர்.

2 ஒருவர் அடுத்திருப்பாரிடம் பொய் பேசுகின்றனர்; தேனொழுகும் இதழால் இருமனத்தோடு பேசுகின்றனர்.

3 தேனொழுகப் பேசும் எல்லா உதடுகளையும் ஆண்டவரே, துண்டித்துவிடுவீராக! பெருமையடித்துக் கொள்ளும் நாவை அறுத்துவிடுவீராக!

4 'எங்கள் நாவன்மை எங்கள் வலிமை; எங்கள் பேச்சுத்திறனே எங்கள் பக்கத் துணை; எங்களுக்குத் தலைவர் வேறு யார்?' என்று சொல்பவரை ஒழித்துவிடுவீராக!

5 'எளியோரின் புலம்பலையும் வறியோரின் பெருமூச்சையும் கேட்டு இப்பொழுதே எழுந்து வருகின்றேன்; அவர்கள் ஏங்குகின்றபடி *அவர்களைப் பாதுகாப்பில் வைப்பேன்*' என்கின்றார் ஆண்டவர்.*

6 ஆண்டவரின் வாக்குறுதிகள் கலப்பற்ற வாக்குறுதிகள்; மண் உலையில் தூய்மையாக்கப்பட்ட வெள்ளி போன்றவை; ஏழுமுறை புடமிடப்பட்டவை.

7 ஆண்டவரே, நீர் எம்மைக் காத்தருளும்; இத்தகைய தலைமுறையிடமிருந்து எம்மை என்றும் காப்பாற்றும்.

8 பொல்லார் எம்மருங்கும் உலாவருகின்றனர்; மானிடரிடையே பொல்லாப்பே ஓங்கி நிற்கின்றது.

குறிப்புகள்

* "அவர்களைப் பாதுகாப்பில் வைப்பேன்" என்பதற்குப் பதில் "அவன் அவர்கள்மீது சீறுகின்றான்" என்று எபிரேய பாடத்தில் உள்ளது.