திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

திருப்பாடல்கள் › அதிகாரம் 110

திருப்பாடல்கள் 110

திருப்பாடல் 110

ஆண்டவரும் அவர் தேர்ந்துகொண்ட அரசரும்

தாவீதின் புகழ்ப்பா

1 ஆண்டவர் என் தலைவரிடம், 'நான் உம் பகைவரை உமக்குப் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார்.1

2 வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஒங்கச் செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்!

3 நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப்போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்.

4 'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே' என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்; அவர் தம் மனத்தை மாற்றிக் கொள்ளார்.2

5 என் தலைவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்; தம் சினத்தின் நாளில் மன்னர்களை நொறுக்குவார்.

6 வேற்று நாடுகளுக்கு அவர் தீர்ப்பளித்து அவற்றைப் பிணத்தால் நிரப்புவார்; பாருலகெங்கும் தலைவர்களை அவர் நொறுக்குவார்.

7 வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் பருகுவார்; ஆகவே அவர் தலைநிமிர்ந்து நிற்பார்.

குறிப்புகள்

1 மத் 22:44; மாற் 12:36; லூக் 20:42-43; திப 2:34-35; 1 கொரி 15:25; எபே 1:20-22; கொலோ 3:1; எபி 1:13; 8:1; 10:12-13.

2 எபி 5:6; 6:20; 7:17,21.