திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

திருப்பாடல்கள் › அதிகாரம் 49

திருப்பாடல்கள் 49

திருப்பாடல் 49

செல்வம் பயன் அற்றது

பாடகர் தலைவர்க்கு;<br/>கோராகியரின் புகழ்ப்பா

1 மக்களினங்களே, அனைவரும் இதைக் கேளுங்கள்; மண்ணுலகில் வாழ்வோரே, யாவரும் செவிகொடுங்கள்.

2 தாழ்ந்தோரே, உயர்ந்தோரே, செல்வர்களே, ஏழைகளே, அனைவரும் ஒருங்கே செவிகொடுங்கள்.

3 என் வாய் ஞானமிகு சொற்களை உரைக்கும்; என் மனம் விவேகமானவற்றை ஆழ்ந்து சிந்திக்கும்.

4 நீதிமொழிக்குச் செவிசாய்ப்பதில் நான் கருத்தாய் உள்ளேன்; யாழிசைத்து அதன் புதிரை விடுவிப்பேன்.

5 துன்பக்காலத்தில் நான் அஞ்சுவானேன்? என்னை வளைத்துக்கொண்டு கொடுமைப்படுத்தும் வஞ்சகர்க்கு நான் அஞ்சுவானேன்?

6 தம் செல்வத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றவரோ தம் செல்வப்பெருக்கைக் குறித்துப் பெருமையாகப் பேசுகின்றனர்.

7 உண்மையில், தம்மைதாமே மீட்டுக்கொள்ள எவராலும் இயலாது; தம் உயிரை மீட்க எதையும் கடவளுக்குத் தர இயலாது.

8 மனித உயிரின் ஈட்டுத் தொகை மிகப் பெரிது; எவராலும் அதனைச் செலுத்த இயலாது.

9 ஒருவரால் என்றென்றும் வாழ்ந்திடமுடியுமா? படுகுழியைக் காணாமல் இருந்திட முடியுமா?

10 ஏனெனில், அறிவிலிகளும் மதிகேடரும் மாண்டழிவதுபோல, ஞானமுள்ளோரும் உயிர் துறப்பதை நாம் காண்கின்றோம் அன்றோ! அவர்கள் எல்லாருமே தத்தம் செல்வத்தைப் பிறருக்கு விட்டுச்செல்கின்றனர்.

11 கல்லறைகளே* அவர்களுக்கு நிலையான வீடுகள்! அவையே எல்லாத் தலைமுறைக்கும் அவர்கள் குடியிருப்பு! அவர்களுக்குத் தங்கள் பெயரில் நிலபுலன்கள் இருந்தும் பயனில்லை.1

12 ஒருவர் தம் மேன்மையிலேயே நிலைத்திருக்க முடியாது; அவர் விலங்குகளைப் போலவே மாண்டழிவார்.

13 தம்மையே மதியீனமாக நம்பியிருப்போரின் முடிவு இதுவே; தம் சொத்திலேயே மகிழ்ச்சி கொள்வோரின் கதி இதுவே. (சேலா)

14 பலியாடுகளைப் போலவே அவர்களும் சாவுக்கெனக் குறிக்கப்பட்டுள்ளனர்; சாவே அவர்களின் மேய்ப்பன்; *அவர்கள் நேரடியாகக் கல்லறைக்குள் செல்வர்;* அப்பொழுது அவர்களது உருவம் மாய்ந்து போகும்; பாதாளமே அவர்களது குடியிருப்பு.2

15 ஆனால், கடவுள் என்னுயிரை மீட்பது உறுதி; பாதாளத்தின் பிடியினின்று விடுவித்து என்னைத் தூக்கி நிறுத்துவார். (சேலா)

16 சிலர் செல்வர் ஆனாலோ, அவர்களின் குடும்பச் செல்வம் பெருகினாலோ, அவர்களைக் கண்டு நிலைகுலையாதே!

17 ஏனெனில் சாகும்போது அவர்கள் எதையும் எடுத்துப் போவதில்லை; அவர்களது செல்வமும் அவர்கள்பின் செல்வதில்லை.

18 உயிரோடிருக்கையில் அவர்கள் தம்மை ஆசிபெற்றோர் என்று கருதினாலும், 'நீங்கள் நன்மையையே நாடினீர்கள்' என மக்கள் அவர்களைப் புகழ்ந்தாலும்,

19 அவர்கள் தம் மூதாதையர் கூட்டத்தோடு சேர்ந்து கொள்வர்; ஒருபோதும் பகலொளியைக் காணப் போவதில்லை.

20 மனிதர் தம் மேன்மையிலேயே நிலைத்திருக்க முடியாது; அவர்கள் விலங்குகளைப் போலவே மாண்டழிவர்.

குறிப்புகள்

1 'கல்லறைகளே' என்பது 'உள்ளுறுப்புகள்' என்று எபிரேய பாடத்தில் உள்ளது.

2 'அவர்கள் நேரடியாகக் கல்லறைக்குள் செல்வர்' என்பது 'நீதிமான்கள் வைகறையில் அவர்கள்மேல் வெற்றி கொள்வர்' என்று எபிரேய பாடத்தில் உள்ளது.