திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

திருப்பாடல்கள் › அதிகாரம் 129

திருப்பாடல்கள் 129

திருப்பாடல் 129

இஸ்ரயேலின் எதிரிகளை முன்னிட்டு மன்றாடியது

1 ‟என் இளமை முதற்கொண்டே என்னைப் பெரிதும் துன்புறுத்தினார்கள்" – இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக!

2 ‟என் இளமை முதற்கொண்டே என்னைப் பெரிதும் துன்புறுத்தினார்கள்; எனினும், அவர்கள் என்மீது வெற்றி பெறவில்லை.

3 உழவர் என் முதுகின்மீது உழுது நீண்ட படைச்சால்களை உண்டாக்கினர்."

4 ஆண்டவர் நீதியுள்ளவர்; எனவே, பொல்லார் கட்டிய கயிறுகளை அவர் அறுத்தெறிந்தார்.

5 சீயோனைப் பகைக்கும் அனைவரும் அவமானப்பட்டுப் புறமுதுகிடுவராக!

6 கூரைமேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்; வளருமுன் அது உலர்ந்துபோகும்.

7 அதை அறுப்போரின் கைக்கு, ஒரு பிடி கூடக் கிடைக்காது; அரிகளைச் சேர்த்தால் ஒரு சுமைகூடத் தேறாது.

8 வழிப்போக்கரும் அவர்களைப் பார்த்து, 'ஆண்டவர் உங்களுக்கு ஆசி வழங்குவாராக!' என்றோ 'ஆண்டவரின் பெயரால் ஆசி வழங்குகிறோம்' என்றோ சொல்லார்.