திருப்பாடல்கள் › அதிகாரம் 80
திருப்பாடல் 80
நாட்டின் புதுவாழ்வுக்காக மன்றாடல்
பாடகர் தலைவர்க்கு;<br/>'சான்றுபகர் லீலிமலர்' என்ற மெட்டு;<br/>ஆசாபின் புகழ்ப்பா
1 இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! யோசேப்பை மந்தையென நடத்திச் செல்கின்றவரே! கேருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்!1
2 எப்ராயிம், பென்யமின், மனாசேயின் முன்னிலையில் உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்!
3 கடவுளே, எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்! எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்!
4 படைகளின் கடவுளாம் ஆண்டவரே! உம் மக்களின் வேண்டுதலுக்கு எதிராக எத்தனை நாள் நீர் சினம் கொண்டிருப்பீர்?
5 கண்ணீராம் உணவை அவர்கள் உண்ணச் செய்தீர்; கண்ணீரை அவர்கள் பெருமளவு பருகச் செய்தீர்.
6 எங்கள் அண்டை நாட்டாருக்கு எங்களைச் சர்ச்சைப்பொருள் ஆக்கினீர்; எங்கள் எதிரிகள் எம்மை ஏளனம் செய்தார்கள்.
7 படைகளின் கடவுளே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்; எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.
8 எகிப்தினின்று திராட்சைக்செடி ஒன்றைக் கொண்டுவந்தீர்; வேற்றினத்தாரை விரட்டிவிட்டு அதனை நட்டு வைத்தீர்.
9 அதற்கென நிலத்தை ஒழுங்குபடுத்திக் கொடுத்தீர்; அது ஆழ வேரூன்றி நாட்டை நிரப்பியது.
10 அதன் நிழல் மலைகளையும் அதன் கிளைகள் வலிமைமிகு கேதுரு மரங்களையும் மூடின.
11 அதன் கொடிகள் கடல்வரையும்* அதன் தளிர்கள் பேராறுவரையும்** பரவின.2
12 பின்னர், நீர் ஏன் அதன் மதில்களைத் தகர்த்துவிட்டீர்? அவ்வழிச் செல்வோர் அனைவரும் அதன் பழத்தைப் பறிக்கின்றனரே!
13 காட்டுப் பன்றிகள் அதனை அழிக்கின்றன; வயல்வெளி உயிரினங்கள் அதனை மேய்கின்றன.
14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்த திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!
15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்!
16 அவர்கள் அதற்குத் தீ மூட்டினார்கள்; அதை வெட்டித் தள்ளிவிட்டார்கள்; உமது முகத்தின் சினமிகு நோக்கினால், அவர்கள் அழிந்துபோவார்களாக!
17 உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக!
18 இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம்.
19 படைகளின் கடவுளான ஆண்டவரே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்! நாங்கள் விடுதலை பெறுமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்!
குறிப்புகள்
1 விப 25:22.
2 "கடல்" என்பது மத்திய தரைக் கடலையும், "பேராறு" என்பது யூப்பிரத்தீசு ஆற்றையும் குறிக்கும்.