திருப்பாடல்கள் › அதிகாரம் 60
திருப்பாடல் 60
விடுதலைக்காக மன்றாடல்
பாடகர் தலைவர்க்கு;
'சான்றுபகர் லீலிமலர்' என்ற மெட்டு;
ஆராம் நகராயிம், ஆராம் சோபா
என்ற அரசுகளோடு
தாவீது போர் புரிகையில்,
யோவாபு திரும்பி வந்து
உப்புப் பள்ளத்தாக்கில் பன்னீராயிரம் ஏதோமியரை
வெட்டி வீழ்த்தியபோது படிப்பினையாகத்
தாவீது பாடிய கழுவாய்ப் பாடல்
1 கடவுளே! நீர் எங்களை வெறுத்து ஒதுக்கிவிட்டீர்; எங்களை நொறுக்கிவிட்டீர்; எங்கள்மீது சீற்றம் கொண்டீர்; இப்பொழுதோ, எங்களை நோக்கித் திரும்பியருளும்.*
2 நிலத்தை நீர் அதிரச் செய்தீர்; அதில் பிளவு உண்டாகச் செய்தீர்; அதன் வெடிப்புகளைச் சீர்ப்படுத்தும், அது ஆட்டம் கண்டுள்ளது;
3 உம் மக்களைக் கடும் துன்பத்தைக் காணச் செய்தீர்; மதியை மயக்கும் மதுவை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.
4 உமக்கு அஞ்சி நடப்போர் எதிரிகளின் அம்பினின்று தப்பித்துக்கொள்ளுமாறு அவர்களுக்கெனக் கொடி ஒன்றை ஏற்றிவைத்தீர். (சேலா)
5 உம் அன்பர்கள் விடுதலை பெறுமாறு, உமது வலக்கரத்தால் எங்களுக்குத் துணை செய்யும்; எங்கள் விண்ணப்பத்திற்குப் பதிலளியும்!
6 கடவுள் தமது தூயகத்தினின்று இவ்வாறு உரைத்தார்; வெற்றிக் களிப்பிடையே செக்கேமைப் பங்கிடுவேன்; சுக்கோத்துப் பள்ளத்தாக்கை அளந்து கொடுப்பேன்.
7 கிலயாது என்னுடையது; மனாசேயும் என்னுடையதே; எப்ராயிம் என் தலைச்சீரா; யூதா என் செங்கோல்!
8 மோவாபு எனக்குப் பாதம்கழுவும் பாத்திரம்; ஏதோமின்மீது என் மிதியடியை எறிவேன்; பெலிஸ்தியாவை வென்று ஆர்ப்பரிப்பேன்.
9 அரண்சூழ் நகரினுள் என்னை இட்டுச் செல்பவர் யார்? ஏதோம் வரை என்னைக் கூட்டிச் செல்பவர் யார்?
10 கடவுளே! நீர் எங்களைக் கைவிட்டு வீட்டீர் அன்றோ! கடவுளே! நீர் எங்கள் படைகளோடு புறப்படவில்லை அன்றோ!
11 எதிரியை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; மனிதர் தரும் உதவியோ வீண்;
12 கடவுளின் துணையால் வீரத்துடன் போரிடுவோம்; அவரே நம் எதிரிகளை மிதித்து விடுவார்.
குறிப்புகள்
* திபா 60: தலைப்பு = 2 சாமு 8:13; 1 குறி 18:12.