திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

திருப்பாடல்கள் › அதிகாரம் 61

திருப்பாடல்கள் 61

திருப்பாடல் 61

பாதுகாப்புக்காக மன்றாடல்

பாடகர் தலைவர்க்கு;<br/>நரம்பிசைக் கருவிகளுடன்;<br/>தாவீதுக்கு உரியது

1 கடவுளே! என் கூக்குரலைக் கேளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாயும்.

2 பூவுலகின் கடைமுனையினின்று உம்மைக் கூப்பிடுகின்றேன்; என் உள்ளம் சோர்வுற்றிருக்கின்றது; உயரமான குன்றுக்கு என்னை அழைத்துச் செல்லும்.

3 ஏனெனில் நீரே என் புகலிடம்; எதிரியின்முன் வலிமையான கோட்டை.

4 நான் உமது கூடாரத்தில் எந்நேரமும் தங்கியிருப்பேன்; உமது இறக்கைகளின் பாதுகாப்பில் தஞ்சம் புகுவேன். (சேலா)

5 ஏனெனில், கடவுளே! நான் செய்த பொருத்தனைகளை நீர் அறிவீர்; உமது பெயருக்கு அஞ்சுவோர்க்குரிய உடைமையை எனக்குத் தந்தீர்.

6 அரசரைப் பல்லாண்டு வாழச் செய்யும்; அவரது ஆயுள் தலைமுறை தலைமுறையாக நீடிக்கட்டும்!

7 கடவுள் முன்னிலையில் அவர் என்றென்றும் வீற்றிருப்பாராக! பேரன்போடும் உண்மையோடும் அவரைக் காத்தருளும்!

8 உமது பெயரை என்றென்றும் புகழ்ந்து பாடுவேன்; நாள்தோறும் என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.