திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

திருப்பாடல்கள் › அதிகாரம் 8

திருப்பாடல்கள் 8

திருப்பாடல் 8

இறைவனின் மாட்சியும் மானிடரின் மேன்மையும்

பாடகர் தலைவர்க்கு; 'காத்து' நகர்ப் பண்; தாவீதின் புகழ்ப்பா

1 ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது.

2 பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் வலிமையை உறுதிப்படுத்தி உம் பகைவரை ஒடுக்கினீர்; எதிரியையும் பழிவாங்குவோரையும் அடக்கினீர்.1

3 உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது,

4 மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்?2

5 ஆயினும், அவர்களைக் கடவுளாகிய* உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.3

6 உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்.4

7 ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள்,

8 வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்படுத்தியுள்ளீர்.

9 ஆண்டவரே, எங்கள் தலைவரே, உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!

குறிப்புகள்

1 மத் 21:16.

2 யோபு 7:17-18; திபா 144:3; எபி 2:6-8.

3 இங்கு வரும் "கடவுளுக்கு" என்னும் சொல்லை "வானதூதர்க்கு" என்றும் மொழி பெயர்க்கலாம்.

4 1 கொரி 15:27; எபே 1:22; எபி 2:8.