திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

திருப்பாடல்கள் › அதிகாரம் 29

திருப்பாடல்கள் 29

திருப்பாடல் 29

புயல் நடுவே ஆண்டவரின் குரல்

தாவீதின் புகழ்ப்பா

1 இறைவனின் மைந்தரே! மாட்சியையும் வலிமையையும் ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள். ஆம்! ஆண்டவருக்கே உரித்தாக்குங்கள்!

2 ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை அவருக்கு உரித்தாக்குங்கள்; தூய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள்.1

3 ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது; மாட்சிமிகு இறைவன் முழங்குகின்றார்; ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார்.

4 ஆண்டவரின் குரல் வலிமைமிக்கது; ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது.

5 ஆண்டவரின் குரல் கேதுருமரங்களை முறிக்கின்றது; ஆண்டவர் லெபனோன் கேதுரு மரங்களை முறித்துவிடுகின்றார்.

6 லெபனோனின் மலையைக் கன்றுக் குட்டியெனத் துள்ளச் செய்கின்றார்; சிரியோன் மலையைக் காட்டெருமைக் கன்றெனக் குதிக்கச் செய்கின்றார்.

7 ஆண்டவரின் குரல் மின்னலைத் தெறிக்கச் செய்கின்றது;

8 ஆண்டவரின் குரல் பாலைவனத்தை அதிரச் செய்கின்றது; ஆண்டவர் காதேசு பாலைவனத்தை நடுங்கச் செய்கின்றார்.

9 ஆண்டவரின் குரல் கருவாலி மரங்களை முறித்து விடுகின்றது*; காடுகளை வெறுமை ஆக்குகின்றது; அவரது கோவிலில் உள்ளஅனைவரும் 'இறைவனுக்கு மாட்சி' என்று ஆர்ப்பரிக்கின்றனர்.2

10 ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது வீற்றிருக்கின்றார்; ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார்.

11 ஆண்டவர் தம் மக்களுக்கு ஆற்றல் அளிப்பாராக! ஆண்டவர் தம் மக்களுக்குச் சமாதானம் அருள்வாராக! ஆண்டவர்தம் மக்களுக்கு ஆசி வழங்குவாராக!

குறிப்புகள்

1 திபா 96:7-9.

2 'மானைக் கன்று ஈனச் செய்கின்றது' எனவும் பொருள்படும்.