திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

திருப்பாடல்கள் › அதிகாரம் 15

திருப்பாடல்கள் 15

திருப்பாடல் 15

கடவுள் மனிதரிடம் எதிர்பார்ப்பவை

தாவீதின் புகழ்ப்பா

1 ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்? உம் திருமலையில் குடியிருப்பவர் யார்?

2 மாசற்றவராய் நடப்போரே! — இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுபவர்;

3 தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார்.

4 நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார்;

5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; — இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர்.