திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

திருப்பாடல்கள் › அதிகாரம் 14

திருப்பாடல்கள் 14

திருப்பாடல் 14

இறைப்பற்று இல்லார்

பாடகர் தலைவர்க்கு; தாவீதுக்கு உரியது

1 'கடவுள் இல்லை' என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்; அவர்கள் சீர்கெட்டு அருவருப்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். நல்லது செய்வோர் எவருமே இல்லை.

2 ஆண்டவர் விண்ணகத்தினின்று மானிடரை உற்றுநோக்குகின்றார்; மதிநுட்பமுள்ளோர், கடவுளை நாடுவோர் எவராவது உண்டோ எனப் பார்க்கின்றார்.

3 எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்; ஒருமிக்கக் கெட்டுப்போயினர்; நல்லது செய்வார் யாரும் இல்லை; ஒருவர்கூட இல்லை.*

4 தீங்கிழைக்கும் யாவரும் அறிவை இழந்துவிட்டார்களோ? உணவை விழுங்குவதுபோல் என் மக்களை விழுங்கப்பார்க்கிறார்களே! அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடுவதுமில்லை.

5 அவர்கள் அஞ்சி நடுங்குவர்; ஏனெனில், கடவுள் நேர்மையாளரின் வழிமரபோடு இருக்கின்றார்.

6 எளியோரின் திட்டத்தை அவர்கள் தோல்வியுறச் செய்கின்றார்கள்; ஆனால், ஆண்டவர் எளியோர்க்கு அடைக்கலமாய் இருக்கின்றார்.

7 சீயோனிலிருந்து இஸ்ரயேலருக்கு மீட்பு வருவதாக! ஆண்டவர் தம் மக்களுக்கு மீண்டும் வளமான வாழ்வை அருளும்போது, யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக! இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக!

குறிப்புகள்

* உரோ 3:10-12.