திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

திருப்பாடல்கள் › அதிகாரம் 17

திருப்பாடல்கள் 17

திருப்பாடல் 17

மாசற்றவனின் மன்றாட்டு

தாவீதின் மன்றாட்டு

1 ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.

2 உம் முன்னிலையினின்று எனக்கு நீதி கிடைக்கட்டும்; உம் கண்கள் நேரியன காணட்டும்.

3 என் உள்ளத்தை ஆய்ந்தறியும்; இரவு நேரத்தில் எனைச் சந்தித்திடும்; என்னைப் புடமிட்டுப் பார்த்திடும்; தீமை எதையும் என்னிடம் காணமாட்டீர்; என் வாய் பிழை செய்யக்கூடாதென உறுதி கொண்டேன்.

4 பிற மானிடர் செய்வது போல் அல்லாமல், நீர் உரைத்த வாக்கிற்கிணங்க, வன்முறையாளரின் வழிகளை விட்டு விலகியுள்ளேன்.

5 என் நடத்தை உம் பாதைகளில் அமைந்துள்ளது; என் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை.

6 இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்.

7 உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே!

8 உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்.

9 என்னை ஒழிக்கத் தேடும் பொல்லாரிடமிருந்தும் என்னைச் சூழ்ந்து கொண்ட எதிரிகளிடமிருந்தும் என்னை மறைத்துக் கொள்ளும்.

10 அவர்கள் ஈவு இரக்கமற்ற கல்நெஞ்சர்கள்; தங்கள் வாயினால் இறுமாப்புடன் பேசுபவர்கள்.

11 அவர்கள் என்னைப் பின் தொடர்கின்றனர்; இதோ! என்னை வளைத்துக் கொண்டனர்; அவர்கள் என்னைத் தரையில் வீழ்த்துவதற்கு, வைத்த கண் வாங்காது காத்திருக்கின்றனர்.

12 பீறிப்போடத் துடிக்கும் சிங்கத்திற்கு அவர்கள் ஒப்பாவர்; மறைவிடத்தில் பதுங்கியிருக்கும் இளஞ்சிங்கத்திற்கு நிகராவர்.

13 ஆண்டவரே, எழுந்து வாரும்; அவர்களை நேருக்குநேர் எதிர்த்து முறியடையும்; பொல்லாரிடமிருந்து உமது வாளால் என்னைக் காத்தருளும்.

14 ஆண்டவரே, மாயும் மனிதரிடமிருந்து – இவ்வுலகமே தங்கள் கதியென வாழ்ந்து மாயும் மனிதரிடமிருந்து – உமது கைவலிமையினால் என்னைக் காப்பாற்றும். அவர்களுக்கென நீர் ஒதுக்கி வைத்துள்ளவற்றால் அவர்கள் வயிற்றை நிரப்பும்; அவர்களின் மைந்தர் வேண்டிய மட்டும் நிறைவு பெறட்டும்; எஞ்சியிருப்பதைத் தங்கள் பிள்ளைகளுக்கு விட்டுச்செல்லட்டும்;

15 நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன்.