திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

திருப்பாடல்கள் › அதிகாரம் 114

திருப்பாடல்கள் 114

திருப்பாடல் 114

பாஸ்காப் பாடல்

1 எகிப்து நாட்டைவிட்டு இஸ்ரயேலர் வெளியேறியபொழுது, வேற்று மொழி பேசிய மக்களை விட்டு யாக்கோபின் குடும்பம் புறப்பட்டபொழுது,1

2 யூதா அவருக்குத் தூயகம் ஆயிற்று; இஸ்ரயேல் அவரது ஆட்சித்தளம் ஆனது.

3 செங்கடல் கண்டது; ஓட்டம் பிடித்தது; யோர்தான் பின்னோக்கிச் சென்றது.2

4 மலைகள் செம்மறிக் கிடாய்கள் போலும் குன்றுகள் ஆட்டுக்குட்டிகள் போலும் துள்ளிக் குதித்தன.

5 கடலே! நீ விலகி ஓடும்படி உனக்கு நேர்ந்தது என்ன? யோர்தானே! நீ பின்னோக்கிச் சென்றது ஏன்?

6 மலைகளே! நீங்கள் செம்மறிக் கிடாய்கள்போல் குதித்தது ஏன்? குன்றுகளே! நீங்கள் ஆட்டுக் குட்டிகள் போல் துள்ளியது ஏன்?

7 பூவுலகே! தலைவர் முன்னிலையில் நடுநடுங்கு! யாக்கோபின் கடவுள் முன்னிலையில் நடுக்கமுறு!

8 அவர் பாறையைத் தண்ணீர்த் தடாகம் ஆக்குகின்றார்; கற்பாறையை வற்றாத நீர்ச்சுனை ஆக்குகின்றார்.3

குறிப்புகள்

1 விப 12:51.

2 விப 14:21; யோசு 3:16.

3 விப 17:1-7; எண் 20:13.