திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

யோபு › அதிகாரம் 40

யோபு 40

1 பின்பு யோபைப் பார்த்து ஆண்டவர் கூறினார்:

2 குற்றம் காண்பவன், எல்லாம் வல்லவரோடு வழக்காடுவானா? கடவுளோடுவாதாடுபவன் விடையளிக்கட்டும்.

3 யோபு ஆண்டவர்க்குக் கூறிய மறுமொழி:

4 இதோ! எளியேன் யான் இயம்புதற்குண்டோ? என் வாயைக் கையால் பொத்திக் கொள்வேன்.

5 ஒருமுறை பேசினேன்; மறுமொழி உரையேன்; மீண்டும் பேசினேன்; இனிப் பேசவேமாட்டேன்.

கடவுளின் இரண்டாம் சொற்பொழிவு

6 ஆண்டவர் சூறாவளியினின்று யோபுக்கு அருளிய பதில்:

7 வீரனைப்போல் இடையை இறுக்கிக் கட்டிக்கொள்; வினவுவேன் உன்னிடம்; விடையெனக்கு அளிப்பாய்.

8 என் தீர்ப்பிலேயே நீ குற்றம் காண்பாயா? உன்னைச் சரியெனக் காட்ட என்மீது குற்றம் சாட்டுவாயா?

9 இறைவனுக்கு உள்ளதுபோல் உனக்குக் கையுண்டோ? அவர்போன்று இடிக்குரலில் முழங்குவாயோ?

10 சீர் சிறப்பினால் உன்னை அணி செய்துகொள்; மேன்மையையும், மாண்பினையும் உடுத்திக்கொள்.

11 கொட்டு உன் கோபப் பெருக்கை! செருக்குற்ற ஒவ்வொருவரையும் நோக்கிடு; தாழ்த்திடு!

12 செருக்குற்ற எல்லாரையும் நோக்கிடு; வீழ்த்திடு! தீயோரை அவர்கள் இடத்திலேயே மிதித்திடு!

13 புழுதியில் அவர்களை ஒன்றாய்ப் புதைத்திடு! காரிருளில் அவர் முகங்களை மூடிடு.

14 அப்பொழுது, உனது வலக்கை உன்னைக் காக்குமென்று நானே ஒத்துக்கொள்வேன்.

பெகிமோத்து

15 இதோ பார், உன்னைப் படைத்ததுபோல் நான் உண்டாக்கிய பெகிமோத்து காளைபோல் புல்லைத் தின்கின்றது.

16 இதோ காண், அதன் ஆற்றல் அதன் இடுப்பில்; அதன் வலிமை வயிற்றுத் தசைநாரில்.

17 அது தன் வாலைக் கேதுருமரம்போல் விரைக்கும்; அதன் தொடை நரம்புகள் கயிறுபோல் இறுகியிருக்கும்;

18 அதன் எலும்புகள், வெண்கலக் குழாய்கள்; அதன் உறுப்புகள் உருக்குக் கம்பிகள்.

19 இறைவனின் படைப்புகளில் தலையாயது அதுவே! படைத்தவரே அதைப் பட்டயத்துடன் நெருக்க முடியும்.

20 மலைகள் அதற்குப் புற்பூண்டுகளை விளைவிக்கின்றன; விலங்குகள் எல்லாம் விளையாடுவதும் அங்கேதான்.

21 அது நிழற்செடிக்கு அடியிலும் நாணல் மறைவிலும் உளைச் சேற்றிலும் படுத்துக் கிடக்கும்.

22 அச்செடி தன் நிழலால் அதை மறைக்கும்; ஓடையின் அலரி அதைச் சூழ்ந்து நிற்கும்.

23 ஆறு புரண்டோடினும் அது மிரண்டோடாது; அதன் முகத்தே யோர்தான் மோதினும் அசைவுறாது.

24 அதன் கண்காண அதனைக் கட்டமுடியுமோ? கொக்கியால் அதன் மூக்கைத் துளைக்க முடியுமோ?