திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

யோபு › அதிகாரம் 10

யோபு 10

1 என் உள்ளம் என் வாழ்வை அருவருக்கின்றது; என் ஆற்றாமையைத் தாராளமாய்க் கொட்டித் தீர்ப்பேன்; உள்ளத்தில் கசப்பினை நான் உரைத்திடுவேன்.

2 நான் கடவுளிடம் சொல்வேன்; என்னைக் கண்டனம் செய்யாதீர்; என் மீது நீர் சாட்டும் குற்றத்தின் காரணம் என்னவெனச் சாற்றுவீர்.

3 என்னை ஒடுக்குவதும் உமது கையின் படைப்பை இகழ்வதும் உலுத்தர் சூழ்ச்சியில் உளம் மகிழ்வதும் உமக்கு அழகாமோ?

4 ஊனக் கண்களா உமக்கு உள்ளன? உண்மையில், மானிடப்பார்வையா உமது பார்வை?

5 மானிட நாள்கள் போன்றவோ உம் நாள்கள்? மனிதரின் வாழ்நாள் அனையவோ உம் ஆண்டுகள்?

6 பின், ஏன் என் குற்றங்களைத் துருவிப் பார்க்கிறீர்? ஏன் என் பாவங்களைக் கிளறுகின்றீர்?

7 நான் குற்றமற்றவன் என நீர் அறிந்தாலும், உம் கையினின்று என்னைத் தப்புவிப்பவர் ஒருவருமில்லை.

8 என்னை வனைந்து வடிவமைத்து உண்டாக்கின உம் கைகள்; இருப்பினும், நீரே என்னை அழிக்கின்றீர்.

9 தயைகூர்ந்து நினைத்துப் பாரும்! களிமண்போல் என்னை வனைந்தீர்; அந்த மண்ணுக்கே என்னைத் திரும்பச் செய்வீரோ?

10 பால்போல் என்னை நீர் வார்க்கவில்லையா? தயிர்போல் என்னை நீர் உறைவிக்கவில்லையா?*

11 எலும்பும் தசைநாரும் கொண்டு என்னைப் பின்னினீர்; தோலும் சதையும் கொண்டு என்னை உடுத்தினீர்.

12 வாழ்வையும் இரக்கத்தையும் எனக்கு வழங்கினீர்; என் உயிர் மூச்சை உம் கரிசனை காத்தது.

13 எனினும், இவற்றை உம் உள்ளத்தில் ஒளித்திருந்தீர்; இதுவே உம் மனத்துள் இருந்ததென நான் அறிவேன்.

14 நான் பாவம் செய்தால், என்னைக் கவனிக்கிறீர்; என் குற்றத்தை எனக்குச் சுட்டிக்காட்டாது விடமாட்டீர்; நான் குற்றம் புரிந்தால் அதை என்மீது சுமத்தாது விடீர்.

15 நான் தீங்கு செய்தால், ஐயோ ஒழிந்தேன்! நான் நேர்மையாக இருந்தாலும் தலைதூக்க முடியவில்லை; ஏனெனில், வெட்கம் நிறைந்தாலும் வேதனையில் உள்ளேன்.

16 தலைநிமிர்ந்தால் அரிமாபோல் என்னை வேட்டையாடுவீர்; உம் வியத்தகு செயல்களை எனக்கெதிராய்க் காட்டுவீர்;

17 எனக்கெதிராய்ச் சான்றுகளைப் புதுப்பிக்கிறீர்; என்மீது உமது சீற்றத்தைப் பெருக்குகிறீர்; எனக்கெதிராய்ப் போராட்டத்தைப் புதிதாக எழுப்புகிறீர்.

18 கருப்பையிலிருந்து என்னை ஏன் வெளிக் கொணர்ந்தீர்? கண் ஏதும் என்னைக் காணுமுன்பே நான் இறந்திருக்கலாகாதா?

19 உருவாகாதவன் போலவே இருந்திருக்கக்கூடாதா? கருவறையிலிருந்தே கல்லறைக்குப் போயிருப்பேனே;

20 என்னுடைய நாள்கள் சிலமட்டுமே; என்னிடமிருந்து எட்டி நிற்பீரானால், மணித்துளி நேரமாவது மகிழ்ந்திருப்பேன்;

21 பின்னர், இருளும் இறப்பின் நிழலும் சூழ்ந்த திரும்ப இயலாத நாட்டிற்குப் போவேன்.

22 அது காரிருளும் சாவின் நிழலும் சூழ்ந்த இருண்ட நாடு; அங்கு ஒழுங்கில்லை; ஒளியும் இருள்போல் இருக்கும்.

குறிப்புகள்

* மனிதன் கருவாகி, தாய் வயிற்றில் வளரும் நிகழ்ச்சியை இவ்வசனம் வருணிக்கிறது.