நீதிமொழிகள் › அதிகாரம் 12
1 அறிவை விரும்புவோர் கண்டித்துத் திருத்தப்படுவதை விரும்புவர்; கண்டிக்கப்படுவதை வெறுப்போர் அறிவற்ற விலங்குகள் ஆவர்.
2 நல்லார் ஆண்டவரது கருணை பெறுவர். தீய சூழ்ச்சி செய்வோரை அவர் கண்டிப்பார்.
3 பொல்லாங்கு செய்து எவரும் நிலைத்த தில்லை; நேர்மையாளரின் வேரை அசைக்க முடியாது.
4 பண்புள்ள மனைவி தன் கணவனுக்கு மணிமுடியாவாள்; இழிவு வருவிப்பவள் அவனுக்கு எலும்புருக்கி போலிருப்பாள்.
5 நேர்மையானவர்களின் கருத்துகள் நியாயமானவை; பொல்லாரின் திட்டங்கள் வஞ்சகமானவை.
6 பொல்லாரின் சொற்கள் சாவுக்கான கண்ணிகளாகும்; நேர்மையாளரின் பேச்சு உயிரைக் காப்பாற்றும்.
7 பொல்லார் வீழ்த்தப்பட்டு வழித் தோன்ற லின்றி அழிவர்; நல்லாரின் குடும்பமோ நிலைத்திருக்கும்.
8 மனிதர் தம் விவேகத்திற்கேற்ற புகழைப் பெறுவர்; சீர்கெட்ட இதயமுடையவரோ இகழ்ச்சியடைவர்.
9 வீட்டில் உணவில்லாதிருந்தும் வெளியில் பகட்டாய்த் திரிவோரைவிட, தம் கையால் உழைத்து எளிய வாழ்க்கை நடத்துவோரே மேல்.
10 நல்லார் தம் கால்நடைகளையும் பரிவுடன் பாதுகாப்பர். பொல்லாரின் உள்ளமோ கொடுமை வாய்ந்தது.
11 உழுது பயிரிடுவோர் மிகுந்த உணவு பெறுவர்; வீணானவற்றைத் தேடியலைவோர் அறிவு அற்றவர்.
12 தீயோரின் கோட்டை களிமண்ணெனத் தூளாகும். நேர்மையாளரின் வேரோ உறுதியாக ஊன்றி நிற்கும்.
13 தீயோர் தம் பொய்யுரையில் தாமே சிக்கிக் கொள்வர்; நேர்மையாளர் நெருக்கடியான நிலையிலிருந்தும் தப்புவர்.
14 ஒருவர் தம் பேச்சினால் நற்பயன் அடைகிறார்; வேறோருவர் தம் கைகளினால் செய்த வேலைக்குரிய பயனைப் பெறுகிறார்.
15 மூடர் செய்வது அவர்களுக்குச் சரியெனத் தோன்றும்; ஞானிகள் பிறருடைய அறிவுரைக்குச் செவி கொடுப்பர்.
16 மூடர் தம் எரிச்சலை உடனடியாக வெளியிடுவர்; விவேகிகளோ பிறரது இகழ்ச் சியைப் பொருட்படுத்தார்.
17 உண்மை பேசுவோர் நீதியை நிலை நாட்டுவோர்; பொய்யுரைப்போரோ வஞ்சகம் நிறைந்தோர்.
18 சிந்தனையற்ற பேச்சு வாள் போலப் புண்படுத்தும்; ஞானிகளின் சொற்களோ புண்களை ஆற்றும்.
19 ஒருவர் உரைக்கும் உண்மை என்றும் நிலைக்கும்; பொய்யுரையின் வாழ்வோ இமைப்பொழுதே.
20 சதித்திட்டம் வகுப்போர் தம்மையே ஏமாற்றிக்கொள்வர்; பொது நலத்தை நாடுவோர் மகிழ்ச்சியோடிருப்பர்.
21 நல்லாருக்கு ஒரு கேடும் வராது; பொல்லாரின் வாழ்க்கையோ துன்பம் நிறைந்த தாய் இருக்கும்.
22 பொய்யுரைக்கும் நாவை ஆண்டவர் அருவருக்கின்றார்; உண்மையாய் நடக்கின்ற வர்களை அவர் அரவணைக்கிறார்.
23 விவேகமுள்ளோர் தம் அறிவை மறைத்துக் கொள்வர்; மதிகேடரோ தம் மூட எண்ணத்தை விளம்பரப்படுத்துவர்.
24 ஊக்கமுடையோரின் கை ஆட்சி செய்யும்; சோம்பேறிகளோ அடிமை வேலை செய்வர்.
25 மனக்கவலை மனிதரின் இதயத்தை வாட்டும்; இன்சொல் அவர்களை மகிழ்விக்கும்.
26 சான்றோரின் அறிவுரை நண்பர்களுக்கு நன்மை பயக்கும்; பொல்லாரின் பாதை அவர்களைத் தவறிழைக்கச் செய்யும்.
27 சோம்பேறிகள் தாம் வேட்டையாடியதையும் சமைத்துண்ணார்; விடாமுயற்சியுடையவரோ அரும் பொருளையும் ஈட்டுவர்.
28 நேர்மையாளரின் வழி வாழ்வு தரும்; முரணானவரின் வழி சாவில் தள்ளும்.