திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

எசாயா › அதிகாரம் 18

எசாயா 18

சூடானுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு

1 எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கு அப்பால் சிறகடித்து ஒலியெழுப்பும் உயிரினங்கள் உடையதோர் நாடு உள்ளது.

2 அது நாணல் படகுகளில் நீரின்மேலே கடல் வழியாகத் தூதரை அனுப்புகிறது; விரைவாய்ச் செல்லும் தூதர்களே, உயர்ந்து வளர்ந்து, பளபளப்பான தோலுடைய இனத்தாரிடம் செல்லுங்கள்; அருகிலும் தொலைவிலும் உள்ளோரை அச்சுறுத்திய மக்கள் கூட்டத்தார் அவர்கள்; ஆற்றல் வாய்ந்தவர்கள், பகைவரை மிதித்து வெற்றிகொள்பவர்கள் அந்த நாட்டினர்; ஆறுகள் குறுக்காகப் பாய்ந்தோடும் நாடும் அது.

3 உலகில் குடியிருக்கும் அனைத்து மக்களே, மண்ணுலகில் வாழ்வோரே, மலைகளின்மேல் கொடியேற்றும்போது உற்று நோக்குங்கள்; எக்காளம் ஊதும்போது செவிகொடுங்கள்;

4 ஏனெனில், ஆண்டவர் என்னிடம் இவ்வாறு சொன்னார்: ‟பகலில் அடிக்கும் வெப்பம் குறைந்த வெயில்போலும், அறுவடைக்கால வெயிலால் உண்டாகும் பனிமேகம் போன்றும் என் இருப்பிடத்தில் அமைதியாய் இருந்து நான் கவனித்துப் பார்ப்பேன்"

5 ஏனெனில், அறுவடைக்கு முன் பூக்கள் பூத்துக் காய்த்து, கனிதரும் பருவம் எய்தும்போது, தழைகளை எதிரி அரிவாள்களால் அறுத்தெறிவான்; படரும் கொடிகளை அரிந்து அகற்றிவிடுவான்.

6 அவை அனைத்தும், மலைகளில் பிணந்தின்னும் பறவைகளுக்கும் தரையில் வாழுகின்ற விலங்குகளுக்கும் விடப்படும். பிணந்தின்னும் பறவைகள் கோடைக் காலத்திலும் தரை வாழும் விலங்குகள் குளிர்காலத்திலும் அவற்றின் மேல் தங்கியிருக்கும்.

7 உயர்ந்து வளர்ந்து பளபளப்பான தோலுடைய இனத்தாரின் நாட்டிலிருந்து அந்நேரத்தில் படைகளின் ஆண்டவருக்குக் காணிக்கைப் பொருள்கள் கொண்டு வரப்படும். அருகிலும் தொலையிலும் உள்ளோரை அச்சுறுத்திய மக்கள் கூட்டத்தார் அவர்கள். அந்நாட்டினர் ஆற்றல் வாய்ந்தோர்; பகைவர்மீது வெற்றிகொள்வோர். ஆறுகள் குறுக்காகப் பாய்ந்தோடும் அந்த நாட்டிலிருந்து படைகளின் ஆண்டவரது பெயர் தங்கியுள்ள சீயோன் மலைக்கு அக்காணிக்கைகள் கொண்டு வரப்படும்.*

குறிப்புகள்

* செப் 1:12.