திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

ஒசேயா › அதிகாரம் 8

ஒசேயா 8

1 எக்காளத்தை ஊது! கழுகு ஒன்று ஆண்டவருடைய வீட்டின்மேல் பாய்ந்து வருகின்றது; அவர்கள் என் உடன்படிக்கையை மீறினார்கள்; என் திருச்சட்டத்தை மீறி நடந்தார்கள்.

2 இஸ்ரயேலர் என்னை நோக்கிக் கூக்குரலிட்டு, "எங்கள் கடவுளே, நாங்கள் உம்மை அறிந்திருக்கிறோம்" என்று சொல்கின்றார்கள்.

3 இஸ்ரயேலரோ நலமானதை வெறுத்து விட்டார்கள்; பகைவன் அவர்களைத் துரத்துவான்.

அரசியல் குழப்பமும் சிலைவழிபாடும்

4 அவர்கள் தாங்களே அரசர்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்; அது என்னாலே அன்று; அவர்களே தலைவர்களை நியமித்துக் கொண்டார்கள்; அதைப்பற்றியும் நான் ஒன்றுமறியேன். தங்கள் வெள்ளியாலும் பொன்னாலும் தங்களுக்கெனச் சிலைகளைச் செய்தார்கள்; தாங்கள் அழிந்துபோகவே அவற்றைச் செய்தார்கள்.

5 சமாரியா மக்கள் வழிபடும் கன்றுக்குட்டியை நான் வெறுக்கின்றேன்; என் கோபத்தீ அவர்களுக்கு எதிராய் எரிகின்றது. இன்னும் எத்துணைக் காலம் அவர்கள் தூய்மையடையாது இருப்பார்கள்?

6 அந்தக் கன்றுக்குட்டி இஸ்ரயேலிடமிருந்து வந்ததன்றோ! அது கடவுளல்லவே! கைவினைஞன் ஒருவன்தானே அதைச் செய்தான்! சமாரியாவின் கன்றுக்குட்டி தவிடுபொடியாகும்.

7 அவர்கள் காற்றை விதைக்கிறார்கள்; கடும்புயலை அறுப்பார்கள். வளரும் பயிர் முற்றுவதில்லை; கோதுமை நன்றாக விளைவதில்லை; அப்படியே விளைந்தாலும் அந்நியரே அதை விழுங்குவர்.

வேற்றினத்தாரை நம்பிப் பாழாய்ப் போன இஸ்ரயேல்

8 இஸ்ரயேல் விழுங்கப்பட்டாயிற்று; இப்பொழுது அவர்கள் வேற்றினத்தார் நடுவில் உதவாத பாத்திரம்போல் இருக்கின்றார்கள்.

9 அவர்கள் தனிமையில் திரிகிற காட்டுக் கழுதைபோல் அசீரியாவைத் தேடிப் போனார்கள். எப்ராயிம் மக்கள் தங்கள் காதலர்க்குப் பொருள் கொடுத்து வருகிறார்கள்.

10 கைக்கூலி கொடுத்து வேற்றினத்தாரை அவர்கள் துணைக்கு அமர்த்திக் கொண்டாலும், இப்பொழுதே நான் அவர்களையும் சேர்த்துச் சிதறடிப்பேன்.* தலைவர்கள் ஏற்படுத்திய மன்னன் சுமத்தும் சுமையில் சிறிது காலம் துயருறுவார்கள்.12

11 எப்ராயிம் பாவம் செய்வதற்கென்றே பலிபீடங்கள் பல செய்துகொண்டான்; அப்பீடங்களே அவன் பாவம் செய்வதற்குக் காரணமாயின.

12 ஆயிரக்கணக்கில் நான் திருச்சட்டங்களை எழுதிக் கொடுத்தாலும், அவை நமக்கில்லை என்றே அவர்கள் கருதுவார்கள்.

13 பலியை அவர்கள் விரும்புகின்றார்கள்; பலி கொடுத்து, அந்த இறைச்சியையும் உண்ணுகிறார்கள்; அவற்றின்மேல் ஆண்டவர் விருப்பங்கொள்ளவில்லை; அதற்கு மாறாக, அவர்கள் தீச்செயல்களை நினைவில் கொள்கின்றார்; அவர்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனை வழங்குவார்; அவர்களோ எகிப்து நாட்டிற்குத் திரும்புவார்கள்.

14 இஸ்ரயேல் தன்னைப் படைத்தவரை மறந்துவிட்டு அரண்மனைகளைக் கட்டினான்; யூதாவோ அரண்சூழ் நகர்கள் பலவற்றை எழுப்பினான்; நானோ அவனுடைய நகர்கள்மேல் நெருப்பை அனுப்புவேன்; அவனுடைய அரண்களை அது பொசுக்கிவிடும்.

குறிப்புகள்

1 - "கூட்டிச் சேர்ப்பேன்" என்பது எபிரேய பாடம்.

2 - "சிறிது காலம் அரசனையும் தலைவர்களையும் திருப்பொழிவு செய்யாது ஓய்ந்திருப்பார்கள்" எனவும் பொருள்படும்.