திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

இணைச் சட்டம் › அதிகாரம் 23

இணைச் சட்டம் 23

ஆண்டவரின் மக்களிடமிருந்து ஒதுக்கப்பட்டவர்கள்

1 விதையடிக்கப்பட்டவனும் ஆண் குறி அறுக்கப்பட்டவனும் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழையலாகாது.

2 வேசித்தனத்தால் பிறந்தவன், அவனது பத்தாம் தலைமுறை வரைக்கும் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழையலாகாது.

3 அம்மோனியரும் மோவாபியரும், அவர்களது பத்தாம் தலைமுறைவரைக்கும், அவர்களைச் சார்ந்த எவரும் எக்காலத்திலும் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழையக்கூடாது.

4 ஏனெனில், நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வரும்வழியில் அவர்கள் அப்பங்களோடும் தண்ணீரோடும் உங்களை எதிர்கொள்ளவில்லை. அத்தோடு, ஆராம் நகராயிலுள்ள பெத்தோர் எனும் ஊரிலிருந்து பெகோரின் மகன் பிலயாமை உன்னைச் சபிக்கும்படி கூலிக்கு அமர்த்தினார்கள்.1

5 ஆயினும், உன் கடவுளாகிய ஆண்டவர் பிலயாமுக்குச் செவிகொடுக்கமனமின்றி, சாபத்தை உனக்கு ஆசியாக மாற்றினார். ஏனெனில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்மீது அன்புகூர்கிறார்.23

6 உன் வாழ்நாள் எல்லாம் நீ அவர்களது நல்லுறவையும் நலத்தையும் நாடாதே.

7 ஏதோமியனை வெறுக்காதே; ஏனெனில், அவன் உன் சகோதரன். எகிப்தியனை வெறுக்காதே; ஏனெனில், அவன் நாட்டில் நீ அந்நியனாய் வாழ்ந்தாய்.

8 அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளின் மூன்றாம் தலைமுறை தொடங்கி ஆண்டவரின் திருப்பேரவைக்குள் வரலாம்.

பாளையத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளல்

9 நீ உன் பகைவருக்கு எதிராகச் சென்று பாளையம் இறங்கியிருக்கையில் எல்லாத் தீச்செயல்களிலிருந்தும் விலகியிரு.

10 உங்களில் ஒருவன் இரவில் நிகழ்ந்த செயலால் தீட்டுப்பட்டிருந்தால், அவன் பாளையத்திற்கு வெளியே செல்லட்டும். பாளையத்திற்குள்ளே வரக்கூடாது.

11 மாலையானதும் நீரில் குளித்து கதிரவன் மறைந்ததும் அவன் பாளையத்துக்குள் வரட்டும்.

12 நீ வெளிக்குச் செல்வதற்கெனப் பாளையத்திற்கு வெளியே ஓர் இடம் இருக்கட்டும்.

13 படைக்கலன்களோடு ஒரு மண்வெட்டியும் வைத்துக்கொள். நீ வெளிக்குச் செல்கையில் அதனால் ஒரு குழி தோண்டு. நீ கழித்ததை அதனால் மூடிவிட்டுத் திரும்பு.

14 ஏனெனில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைக் காக்கவும் உன் பகைவர்களை உன்னிடம் ஒப்படைக்கவும் பாளையத்துக்குள்ளே உலா வருகிறார். அவர் உன்னிடத்தில் கழிவைக்கண்டு உன்னைவிட்டு விலகாதவாறு உன் பாளையம் தூய்மையாய் இருக்கட்டும்.

பிற சட்டங்கள்

15 தம் தலைவனிடமிருந்து தப்பிவந்து உன்னிடம் அடைக்கலம் தேடியுள்ள அடிமைகளை அவனிடம் ஒப்படைக்காதே.

16 குடியிருப்பு ஒன்றில் தமக்குப் பிடித்தமானதைத் தேர்ந்து கொண்டு அவர்கள் உன்னோடு உன்னிடையே இருப்பாராக. நீ அவர்களைக் கொடுமைப்படுத்தாதே.

17 இஸ்ரயேலின் புதல்வியருள் எவளும் விலைமகளாய் இருத்தலாகாது. இஸ்ரயேலின் புதல்வர் எவனும் விலைமகனாய் இருத்தலாகாது.4

18 விலைமாதின் வாடகையையோ, விலை மகளின் கூலியையோ எவ்வித நேர்ச்சையின் பொருட்டும் உன் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்திற்குள் கொண்டு வராதே. ஏனெனில், இவை இரண்டுமே அவருக்கு அருவருப்பானவை.

19 உன் இனத்தவனிடமிருந்து வட்டி வாங்காதே. பணத்துக்கோ, தானியத்துக்கோ, கடனாகக் கொடுத்த எந்தப் பொருளுக்கோ வட்டி வாங்காதே.

20 வேற்று இனத்தானிடமிருந்து நீ வட்டி வாங்கலாம். ஆனால், நீ உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டில், நீ மேற்கொள்ளும் செயல்களில் எல்லாம், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கும் பொருட்டு உன் இனத்தானிடம் வட்டி வாங்காதே.5

21 உன் கடவுளாகிய ஆண்டவருக்கு நேர்ச்சை செய்திருந்தால், அதைச் செலுத்துவதற்குக் காலந்தாழ்த்தாதே. ஏனெனில், அது உனக்குப் பாவமாகும். உன் கடவுளாகிய ஆண்டவரும் அதை உன்னிடம் கேட்பார் என்பது உறுதி.6

22 ஆனால், நேர்ச்சை செய்யாதிருந்தால் அது உனக்குப் பாவமாகாது.

23 உனது வாயால் வாக்களித்து, உன் சொந்த விருப்பத்தினால் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு நேர்ச்சை செய்வதால் உன்வாயால் சொல்வதைச் செயலில் காட்டக் கருத்தாயிரு.

24 உனக்கு அடுத்திருப்பவனின் திராட்சைத் தோட்டத்திற்குச் சென்றால், உன் விருப்பம்போல் திராட்சையை உண்ணலாம்; ஆனால், உன் கூடையில் எதையும் வைத்தலாகாது.

25 உனக்கு அடுத்திருப்பவனுடைய விளை நிலத்திற்குச் சென்றால், உன்கையால் கதிர்களைக் கொய்யலாம்; ஆனால், கதிர் அரிவாளை உனக்கு அடுத்திருப்பவனின் கதிர்களில் வைக்காதே.

குறிப்புகள்

1 எண் 22:1-6.

2 நெகே 13:1-2.

3 எண் 23:7-24:9.

4 லேவி 19:29.

5 விப 22:25; லேவி 25:36-37; இச 15:7-11.

6 எண் 30:1-16; மத் 5:33.