இணைச் சட்டம்
முன்னுரை
திருவிவிலியத்தின் பகுதியாகிய பழைய ஏற்பாட்டின் நான்காம் நூலாக அமைந்தது இணைச் சட்டம் ஆகும். இஸ்ரயேல் மக்கள் பாலை நிலத்தில் நெடும் பயணம் செய்து, கானான் நாட்டில் நுழைவதற்குச் சற்றுமுன், அவர்களுக்கு மோசே வழங்கிய பேருரைகளின் தொகுப்பாக 'இணைச் சட்டம்' என்னும் இந்நூல் அமைந்துள்ளது.
இந்நூலில் தரப்பட்டுள்ள செய்திகளாவன:
கடந்த நாற்பதாண்டுகளில் நிறைவேறிய சிறப்பான நிகழ்ச்சிகளை மக்களுக்கு மோசே நினைவுறுத்துகையில் பாலை நிலத்தின் வழியாகக் கடவுள் அவர்களை எவ்வாறு வழிநடத்தினார் என்றும் அவருக்கு அவர்கள் எவ்வாறு பணிந்து நடக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு உணர்த்துகிறார்.
1) அனைத்து மானிடரையும் மீட்குமாறு, கடவுள் ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்து, அவர்தம் வழிமரபினர் வரலாற்றில் தாமே செயல்பட்டு, மீட்புப் பணியைத் தொடர்ந்தாற்றுகிறார் என்பதை இந்நூல் விரித்துரைக்கின்றது. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்குத் தாம் அளித்த வாக்குறுதியை இறைவன் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் இந்நூல் முற்றுப்பெறுகின்றது.
2) பத்துக் கட்டளைகளையும் சிறப்பாக முதற் கட்டளையையும் அவர்கள் பின்பற்றி, ஆண்டவருக்கு மட்டுமே அவர்கள் ஊழியம் செய்ய வேண்டுமென்று மோசே வற்புறுத்துகிறார். மேலும் வாக்களிக்கப்பட்ட நாட்டில் இஸ்ரயேலரின் வாழ்க்கைத் தடமாக இருக்க வேண்டிய பல்வேறு சட்டங்களை நினைவூட்டுகிறார்.
3) அவர்களோடு கடவுள் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையை நினைவுறுத்தி அதன் நிபந்தனைகளை அவர்கள் நிறைவேற்றுமாறு அவர்களை அழைக்கிறார்.
4) இறைமக்களின் அடுத்த தலைவராக யோசுவாவை அவர் ஏற்படுத்துகின்றார். இறுதியாக, கடவுளின் உண்மைத் தன்மையைப் போற்றிப் புகழ்ப்பா ஒன்று பாடி, இஸ்ரயேல் குலங்களுக்கு ஆசி வழங்கியபின், யோர்தான் ஆற்றுக்குக் கிழக்கே மோவாபு நாட்டில் இறக்கின்றார்.
கடவுள் இஸ்ரயேல் மக்கள் மீது பேரன்பு கொண்டு, அவர்களுக்கு விடுதலை அளித்துத் தம் ஆசியை வழங்குகிறார். இதனை அவர்தம் மக்களும் நினைவில் கொண்டு அவர்மீது அன்பு கூர்ந்து அவரைப் பணிந்தால் அவர்கள் வாழ்வைப் பெற்று அவர்தம் ஆசியைத் தொடர்ந்து பெறுவர் என்பதே இந்நூலின் மையக் கருத்து ஆகும். 'கட்டளைகளுள் முதன்மையானது எது?' என்ற வினாவிற்கு இயேசு கிறிஸ்து தந்த விடை இந்நூலின் (6:4-6) இடம் பெற்றுள்ளது சிறப்புக்குரியது.
குறிப்பு
எபிரேய மூலத்தில் ஒருமையும் (நீ, உன்...) பன்மையும் (நீங்கள், உங்கள்...) கலந்து காணப்படுகின்றன். ஆயினும் இந்நூலில் பொருள் இலக்கண அமைதிக்கேற்ப அவை முறைப்படுத்தப்பட்டுள்ளன.