திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

யோனா › அதிகாரம் 2

யோனா 2

யோனாவின் மன்றாட்டு

1 யோனா அந்த மீன் வயிற்றில் இருந்தவாறு, தம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடலானார்:

2 "ஆண்டவரே! எனக்கு இக்கட்டு வந்த வேளைகளில் நான் உம்மை நோக்கி மன்றாடினேன். நீர் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தீர். பாதாளத்தின் நடுவிலிருந்து உம்மை நோக்கிக் கதறினேன்; என் கூக்குரலுக்கு நீர் செவிகொடுத்தீர்;

3 நடுக் கடலின் ஆழத்திற்குள் என்னைத் தள்ளினீர்; தண்ணீர்ப் பெருக்கு என்னைச் சூழ்ந்துகொண்டது. நீர் அனுப்பிய அலைதிரை எல்லாம் என்மீது புரண்டு கடந்து சென்றன.

4 அப்பொழுது நான், 'உமது முன்னிலையிலிருந்து புறம்பே தள்ளப்பட்டேன்; இனி எவ்வாறு உமது கோவிலைப் பார்க்கப் போகிறேன்' என்று சொல்லிக்கொண்டேன்.

5 மூச்சுத் திணறும்படி தண்ணீர் என்னை அழுத்திற்று; ஆழ்கடல் என்னைச் சூழ்ந்தது; கடற்பாசி என் தலையைச் சுற்றிக் கொண்டது.

6 மலைகள் புதைந்துள்ள ஆழம்வரை நான் கீழுலகிற்கு இறங்கினேன். அங்கேயே என்னை என்றும் இருத்தி வைக்கும்படி, அதன் தாழ்ப்பாள்கள் அடைத்துக் கொண்டன. ஆனால், என் கடவுளாகிய ஆண்டவரே, நீர் அந்தக் குழியிலிருந்து என்னை உயிரோடு மீட்டீர்.

7 என் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தபோது, ஆண்டவரே! உம்மை நினைத்து வேண்டுதல் செய்தேன். உம்மை நோக்கி நான் எழுப்பிய மன்றாட்டு உமது கோவிலை வந்தடைந்தது.

8 பயனற்ற சிலைகளை வணங்குகின்றவர்கள் உம்மிடம் கொண்டிருந்த பற்றினைக் கைவிட்டார்கள்.

9 ஆனால், நான் உம்மைப் புகழ்ந்து பாடி உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; நான் செய்த பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். மீட்பு அளிப்பவர் ஆண்டவரே" என்று வேண்டிக்கொண்டார்.

10 ஆண்டவர் அந்த மீனுக்குக் கட்டளையிட, அது யோனாவைக் கரையிலே கக்கியது.