எரேமியா › அதிகாரம் 47
பெலிஸ்தியருக்கு எதிராக
1 பார்வோன் காசாவைத் தாக்கும் முன்னர் பெலிஸ்தியரைக் குறித்து, இறைவாக்கினர் எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு:
2 ஆண்டவர் கூறுவது இதுவே: வடக்கினின்று வெள்ளம் பொங்கி எழுகின்றது; கரை புரண்டோடும் காட்டாறென அது மாறுகின்றது. நாட்டையும் அதில் உள்ள அனைத்தையும் நகரையும் அதன் குடிகளையும் மூழ்கடிக்கும். மனிதர் கூக்குரலிடுவர்; நாட்டு மக்கள் அனைவரும் ஓலமிடுவர்.
3 போர்க் குதிரைகளின் குளம்பொலியையும் தேர்களின் இரைச்சலையும் அவற்றின் உருளை ஓசையையும் கேட்டு, தந்தையர் கை சோர்ந்தமையால் தம் குழந்தைகளையும் திரும்பிப் பார்க்கமாட்டார்கள்.
4 பெலிஸ்தியர் எல்லாரும் அழியும் நாள், தீர், சீதோனும் அவற்றின் எஞ்சியுள்ள துணையாளர் எல்லாரும் ஒழியும் நாள் நெருங்கிவிட்டது. ஆண்டவர் பெலிஸ்தியரையும் கப்தோர் தீவின் எஞ்சியோரையும் அழிக்கவிருக்கிறார்.
5 காசா மொட்டையடிக்கப்படும்; அஸ்கலோன் அழிக்கப்படும்; அனாக்கியருள்* எஞ்சியிருப்போரே, எத்துணைக் காலம் நீங்கள் உங்களையே காயப்படுத்திக் கொள்வீர்கள்?1
6 ஓ, ஆண்டவரின் வாளே! என்று நீ ஓய்ந்திருப்பாய்? நீ உன் உறைக்குள் செல்! அங்கே ஓய்வெடு, அமைதியாய் இரு.
7 ஆண்டவர் அதற்குக் கட்டளை கொடுத்திருக்கிறார்; அது* எப்படி ஓய்ந்திருக்க முடியும்? அஸ்கலோனுக்கும் கடற்கரைப் பகுதிக்கும் எதிராக அவர் அதற்குப் பணி குறித்து வைத்துள்ளாரே!23
குறிப்புகள்
1 - 'அவர்களது பள்ளத்தாக்கு' என்பது எபிரேய பாடம்.
2 - 'நீ' என்பது எபிரேய பாடம்.
3 எசா 14:29-31; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5-7.