திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

எசேக்கியேல் › அதிகாரம் 15

எசேக்கியேல் 15

திராட்சைக் கொடியின் உவமை

1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

2 மானிடா! காட்டிலிருக்கும் எல்லா மரக்கிளைகளையும் விட திராட்சைக் கொடி எவ்வகையில் சிறந்தது?

3 ஏதாவது வேலை செய்ய அதிலிருந்து கட்டை எடுக்கப்படுகிறதா? அல்லது ஏதாவது பாண்டம் தொங்கவிட ஒரு முளையை அதிலிருந்து செய்வார்களா?

4 இதோ, அது நெருப்புக்கு இரையாகப் போடப்படுகிறது; அதன் இரு முனைகளையும் நெருப்பு எரிக்கிறது; அதன் நடுப்பகுதி கருகிப்போகிறது; அது எந்த வேலைக்காவது பயன்படுமா?

5 இதோ, அது முழுமையாய் இருந்தபோதே அதைக்கொண்டு ஒரு வேலையும் செய்யமுடியவில்லை. நெருப்பால் எரிந்து கருகிய அதை எந்த வேலைக்காவது பயன்படுத்த முடியுமா?

6 ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; காட்டுத் தாவரங்களுள் ஒன்றான திராட்சைக் கொடியை நான் நெருப்புக்கு இரையாக அளித்தது போல், எருசலேமில் வாழ்வோரையும் கையளிப்பேன்.

7 என் முகத்தை அவர்களுக்கு எதிராகத் திருப்புவேன். அவர்கள் நெருப்பிலிருந்து தப்பிச் சென்றாலும், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும். நான் என் முகத்தை அவர்களுக்கு எதிராகத் திருப்பும்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

8 நான் நாட்டைப் பாழாக்குவேன். ஏனெனில், அவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளனர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.