திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

குறிப்பேடு - முதல் நூல் › அதிகாரம் 16

குறிப்பேடு - முதல் நூல் 16

1 அவர்கள் கடவுளின் பேழையைக் கொண்டு வந்து, தாவீது அதற்கென்று அமைத்திருந்த கூடாரத்தின் நடுவே வைத்தனர். பின்பு, கடவுளின் முன் எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் செலுத்தினர்.

2 தாவீது எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் செலுத்திய பின்பு மக்களுக்கு ஆண்டவரின் பெயரால் ஆசி வழங்கினார்.

3 அவர் இஸ்ரயேலராகிய ஆண் பெண் அனைவருக்கும் ஆளுக்கு ஓர் அப்பமும், ஒரு துண்டு இறைச்சியும், ஒரு திராட்சைப்பழ அடையும் கொடுத்தார்.

4 பின்பு, அவர் ஆண்டவரின் பேழையின் முன் வழிபாடு நடத்தவும், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு நன்றி செலுத்தவும், அவரைப் போற்றவும், லேவியரில் சிலரைத் திருப்பணியாளராக நியமித்தார்.

5 ஆசாபு தலைவராகவும், செக்கரியா துணைத் தலைவராகவும் எயியேல், செமிரா மோத்து, எகியேல், மத்தித்தியா, எலியாபு, பெனாயா, ஓபேது-ஏதோம், எயியேல் ஆகியோர் தம்புரு, சுரமண்டலக் கருவிகளை வாசிக்கவும், ஆசாபு கைத்தாளம் கொட்டவும்,

6 பெனாயா, யகசியேல் ஆகிய குருக்கள் இருவரும் கடவுளின் உடன்படிக்கைப் பேழையின் முன் இடைவிடாமல் எக்காளங்களை ஊதவும் நியமிக்கப்பட்டனர்.

இறை புகழ்ச்சிப் பாடல்

திபா 105:1-15; 96:1-13; 106:1,47-48

7 இவ்வாறு, தாவீது ஆண்டவருக்கு நன்றிப்பாடல்களைப் பாடும் பொறுப்பை ஆசாபுக்கும் அவர் உறவின்முறையினருக்கும் முதன்முதலாக அளித்தார்;

8 "ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்; அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.

9 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்; அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்!

10 அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!

11 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்; அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!

12 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்; அவர்தம் அருஞ்செயல்களையும் அவரது வாய் மொழிந்த நீதித்தீர்ப்பு களையும் நினைவில் கொள்ளுங்கள்.

13 அவரின் ஊழியராம் இஸ்ரயேலின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் புதல்வரே!

14 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித்தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன.

15 அவரது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்ளுங்கள்; ஆயிரம் தலைமுறைக்கென அவர் அளித்த வாக்குறுதியை மறவாதீர்கள்!

16 ஆபிரகாமுடன் அவர் செய்து கொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்கு அவர் ஆணையிட்டுக் கூறியதையும் நினைவில் கொள்ளுங்கள்!1

17 யாக்கோபுக்கு நியமமாகவும் இஸ்ரயேலுக்கு என்றுமுள உடன்படிக்கையாகவும் அதை அவர் உறுதிப்படுத்தினார்.

18 'கானான் நாட்டை உனக்கு அளிப்பேன்; அப்பங்கே உனக்கு உரிமைச்சொத்தாய் இருக்கும்' என்றார் அவர்.2

19 அப்போது, அவர்கள் மதிப்பிலும் எண்ணிக்கையிலும் மிகக் குறைந்தவராய் இருந்தார்கள்; அங்கே அந்நியராய் இருந்தார்கள்.

20 ஒரு நாட்டினின்று மற்றொரு நாட்டிற்கும் ஓர் அரசினின்று மற்றொரு மக்களிடமும் அலைந்து திரிந்தார்கள்.

21 யாரும் அவர்களை ஒடுக்குமாறு அவர் விட்டுவிடவில்லை; அவர்களின் பொருட்டு மன்னர்களை அவர் கண்டித்தார்;

22 'நான் அருள்பொழிவு செய்தாரைத் தொடாதீர்; என் இறைவாக்கினர்க்குத் தீங்கிழைக்காதீர்', என்றார் அவர்.3

23 உலகெங்கும் வாழ்வோரே! ஆண்டவருக்குப் புகழ்பாடுங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்!

24 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.

25 ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்; பெரிதும் போற்றத்தக்கவர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே!

26 மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே! ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர்!

27 மாட்சியும் புகழ்ச்சியும் அவர் திருமுன் உள்ளன! ஆற்றலும் அக்களிப்பும் அவரது திருத்தலத்தில் உள்ளன!

28 மக்களினங்களின் குடும்பங்களே! ஆண்டவருக்குச் சாற்றுங்கள்! மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்!

29 ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்; உணவுப் படையல் ஏந்தி அவர்திருமுன் வாருங்கள்; தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்!

30 உலகெங்கும் வாழ்வோரே! அவர் திருமுன் நடுங்குங்கள்; உலகம் உறுதியுடன் நிலை கொண்டுள்ளது; இனி அது அசைக்கப்படுவதில்லை.

31 விண்ணுலகம் மகிழ்வதாக! மண்ணுலகம் களிகூர்வதாக! 'ஆண்டவர் ஆள்கின்றார்' என்று பிற இனத்தார்க்கு அறிவிப்பராக!

32 கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்; வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்!

33 அப்பொழுது காட்டு மரங்கள் ஆண்டவர் திருமுன் மகிழ்ந்து பாடட்டும்! ஏனெனில், அவர் மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்.

34 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு!4

35 எங்கள் மீட்பராகிய கடவுளே! எங்களை விடுவித்தருளும்! வேற்று நாடுகளினின்று எங்களை விடுவித்து ஒன்று சேர்த்தருளும்! அப்பொழுது, நாங்கள் உமது திருப்பெயருக்கு நன்றி செலுத்துவோம்; உம்மைப் புகழ்வதில் பெருமை கொள்வோம்;

36 'இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் ஊழி ஊழியாகப் புகழப் பெறுவாராக' என்று சொல்லுங்கள். அப்பொழுது, மக்கள் அனைவரும் 'ஆமென்' என்று சொல்லி, ஆண்டவரைப் போற்றினர்.

எருசலேம், கிபயோனில் வழிபாடு

37 பின்பு, தாவீது ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையின்முன் தொடர்ந்து எந்நாளும் பணிவிடை செய்வதற்காக, பேழைக்கு முன்பாக இருக்குமாறு ஆசாபையும் அவரின் உறவின் முறையாரையும் பணித்தார்.

38 ஓபேது ஏதோமும் அவரின் உறவின் முறையாளர்களான அறுபத்து எட்டுப்பேரும் அவர்களுக்கு உதவி செய்யவேண்டும். எதுத்தூணின் மகனான ஓபேது ஏதோமும், கோசாவும் வாயில் காவலராக நியமிக்கப்பட்டனர்.

39 குரு சாதோக்கும் அவர் உறவின் முறைக் குருக்களும் கிபயோன் தொழுகைமேட்டில் ஆண்டவரின் திருக்கூடாரத்தின்முன் பணிசெய்ய வேண்டும்.

40 இஸ்ரயேலுக்கு ஆண்டவர் கட்டளையாகத் தந்த திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, காலையிலும் மாலையிலும் தவறாமல் எரி பலிபீடத்தின் மேல் அவர்கள் எரிபலிகளைச் செலுத்த வேண்டும்.

41 இவர்களோடு ஏமானையும் எதுத்தூனையும் பெயர் சொல்லித் தேர்ந்து கொள்ளப்பட்ட சிலரையும் 'ஆண்டவரின் பேரன்பு என்றென்றும் உள்ளது' என்றுரைத்து அவருக்கு நன்றி செலுத்துமாறு கட்டளையிட்டார்;

42 இவர்களோடு ஏமான், எதுத்தூன் ஆகியோரை எக்காளங்களையும், கைத்தாளங்களையும், இறைப்பாடலுக்குரிய இசைக் கருவிகளையும் இசைக்க ஏற்படுத்தினார்; எதுத்தூனின் புதல்வரை வாயில் காவலராக நியமித்தார்.

43 பின்னர், மக்கள் அனைவரும் தம் வீடு திரும்பினர்; தாவீதும் தம் வீட்டாருக்கு ஆசி வழங்க, வீடு திரும்பினார்.5

குறிப்புகள்

1 தொநூ 12:7; 26:3.

2 தொநூ 28:13.

3 தொநூ 20:3-7.

4 2 குறி 5:13; எஸ்ரா 3:11; திபா 100:5; 106:1; 107:1; 118:1; 136:1; எரே 33:11.

5 2 சாமு 6:19-20.